Wednesday, 6 March 2019

இந்தியா கடைசி ஓவரில் சாதனை வெற்றி!


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நாக்பூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 116 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அணியின் எண்ணிக்கை 83 ஆக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கவாஜாவும் 38 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் 12 ரன்னில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்புடன் ஆடினார். அவர் 48 ரன்னில் ரன் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையானது. மற்றொருபுறம் ஸ்டாய்னிஸ் அரை சதமடித்து இறுதி வரை போராடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சர்வதேசப் போட்டிகளில் தனது 500ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 40ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment