Wednesday, 27 February 2019

பயோ மெட்ரிக் தடை: மனுதாரருக்கு அபராதம்!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுக்கு 'பயோ- மெட்ரிக்' முறையை அறிமுகப்படுத்துவதைத் தடை செய்யுமாறு கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கிராமப் புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கி வரும் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அப்பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் தினமும் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வருவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால் இந்த 'பயோ-மெட்ரிக்' முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 27) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரும் வரை பயோ-மெட்ரிக் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment