Sunday, 27 January 2019

ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: தலைவர்கள்!




போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

9அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று (ஜனவரி 26) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, காவல் துறையினர் கைது செய்தும் வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்யாமல், அவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்

ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாவட்டந்தோறும் நள்ளிரவில் கைது செய்யும் அதிமுக அரசின் அராஜக - அடக்குமுறை நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஊழியர்களிடையே வெறுப்பு - எதிர்ப்பு - பகை ஆகியவற்றை வளர்க்கத் தூபம் போடாமல், அவை அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து, போராடும் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக முதல்வர் நேரடியாக அழைத்துப் பரிவுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், இந்தப் போராட்டத்துக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர், வைகோ

மாணவர்களுக்கு 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளதை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைப்பதும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதும் கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். அறப்போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்

குடியரசுத் தினம் என்றுகூட பார்க்காமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்புக்குள்ளான இந்த நிலைக்குத் தமிழக அரசே முழுமுதல் காரணமாகும். தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

விசிக தலைவர், திருமாவளவன்

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை அழைத்து அரசு, உரிய முறைப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களை அச்சுறுத்துவது, கைது செய்து சிறையிலடைப்பது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment