Saturday, 8 December 2018

சாலையில் வாக்குப்பதிவு இயந்திரம்: அதிகாரிகள் இடைநீக்கம்!


ராஜஸ்தான் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்த விவகாரத்தில் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. சத்தீஸ்கர் மாநிலம், தமாத்ரி பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதாகக் கூறி சிலர் மடிக்கணினிகளுடன் சென்றனர் என்று அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா குற்றம்சாட்டியிருந்தார்.

அதுபோன்று, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் கண்காணிப்பு கேமரா நிறுத்திவைக்கப்பட்டிருந்தாகவும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புகார் எழுந்திருந்த நிலையில், ராஜஸ்தானில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்துள்ளது

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று (டிசம்பர் 7) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தலில் 72.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன

இதனிடையே, பாரன் மாவட்டத்தில் உள்ள கிஷான்கன்ஜ் தொகுதிக்கு உட்பட்ட ஷாஹாபாத் பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று நேற்று இரவு சாலையில் கிடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு தொடர்புடைய அப்துல் ரஃபீக் மற்றும் பத்வாரி நவல் சிங் என 2 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment