Monday, 10 December 2018

கடைசி நேரத்தில் ஆட்டம் காட்டிய ஆஸ்திரேலிய அணி!! வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா


ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர்கள், நட்சத்திர வீரர்கள் ஆகியோரின் விக்கெட்டுகளை கூட எளிதாக வீழ்த்திவிட்ட இந்திய பவுலர்கள், கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்கு கடுமையாக போராடினர். ஒரு வழியாக கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி 31 ரன்களில் வென்று, வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களையும் எடுத்தது. 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்ததால் 322 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரின் விக்கெட்டுகள் நான்காம் நாளில் வீழ்த்தப்பட்டுவிட்டன. எனினும் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தை டிராவிஸ் ஹெட்டும் ஷான் மார்ஷும் நின்று முடித்துவிட்டனர்.
கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிராவிஸ் ஹெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அரைசதம் அடித்த ஷான் மார்ஷை 60 ரன்களில் பும்ரா வெளியேற்றினார். களத்தில் நிலைத்த ஷான் மார்ஷை வீழ்த்தியதோடு, அவருக்கு அடுத்து சிறப்பாக ஆடிவந்த அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னையும் பும்ரா வீழ்த்தினார். 41 ரன்கள் அடித்த டிம் பெய்னை அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா.
இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தட்டுத்தடுமாறி, ஆனால் விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் ரன்களை சேர்த்தனர். தன் பங்கிற்கு 28 ரன்கள் அடித்த ஸ்டார்க்கை ஷமி வீழ்த்தினார். பின்னர் கம்மின்ஸுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி இந்திய அணிக்கு சிறிது நேரம் ஆட்டம் காட்டியது. எனினும் கம்மின்ஸை வீழ்த்தி மீண்டும் பிரேக் கொடுத்தார் பும்ரா.
9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன; இனி இந்தியாவின் வெற்றி எளிது என்று பார்த்தால் அதுதான் கிடையாது. கடைசி விக்கெட்டுக்கு லயனுடன் ஜோடி சேர்ந்த ஹேசில்வுட், விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் போராட்ட குணத்துடன் ஆடினார். லயனும் ஹேசில்வுட்டும் கடுமையாக போராடினர். எனினும் கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட்டை அஷ்வின் வீழ்த்தினார்.
இதையடுத்து இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருமுறை கூட முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இதுதான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதாகும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்கி சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment