Tuesday, 4 December 2018

நாளை விண்ணில் பாயும் ஜிசாட்-11


அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், நாளை அதிகாலையில் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்காக தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா விண்வெளி மையத்தில் முகாமிட்டுள்ளனர் இஸ்ரோ அதிகாரிகள்.

இந்தியாவின் தொலைதொடர்புக்கான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட்–11 ஆகும். இது 5,854 கிலோ எடை கொண்டது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஏவப்பட்ட ஜிசாட் -29 செயற்கைக்கோளானது 3,423 கிலோ எடை கொண்டது. நாளை (டிசம்பர் 5) அதிகாலை 2.07 முதல் 3.23 மணிக்குள் ஜிசாட்-11 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

கடந்த மார்ச் 26ஆம் தேதியன்றே ஜிசாட்-11யை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தது இஸ்ரோ. ஆனால், அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் செயற்கைக்கோள் பெங்களூருவுக்குக் கொண்டுவரப்பட்டு, அதில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. தற்போது எல்லாம் சீரான நிலையில், ஏரியான் 5 விண்கலம் மூலம் இது விண்ணில் பாயவுள்ளது. இதற்காக இஸ்ரோ தலைவர் கே.சிவன் உட்படப் பொறியாளர்கள் பலர் பிரெஞ்ச் கயானாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் மூலமாக, நாட்டில் இதுவரை இணைய சேவை பெறாத பகுதிகள் கூட பயன் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கம்பிவட இணைய சேவை மூலமாக, நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தற்போது அதிவேக இணைய சேவை கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட் – 29, ஜிசாட் – 19 மூலமாக அதிவேக இணையதள சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜிசாட் -11 செயற்கைக்கோளுடன், தென்கொரியாவின் ஜியோ– கோம்ப்சாட்2ஏவும் ஏவப்படவுள்ளது.

No comments:

Post a Comment