Sunday, 4 November 2018

அனிதா நினைவாக செயலி!


நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும், அது தொடர்பான தகவல்களும் அடங்கிய புதிய செயலி ஒன்று, அரியலூர் மாணவி அனிதா நினைவாக நேற்று (நவம்பர் 3) வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதால், அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதனால், நீட் தேர்வில் வெற்றி பெறும் நோக்கில் தமிழக மாணவர்கள் அனைவரும் கடின முயற்சியுடன் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து சில மாணவிகள் இதேபோல நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன.

இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெகதீசன் என்பவரது மகள் இனியாள் என்பவர், அனிதா நினைவாகச் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இனியாள் டெல்லியிலுள்ள சமஸ்கிருதப் பள்ளியொன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அனிதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியில் நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும் அது தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து இனியாள் கூறுகையில், “பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் அனிதாவால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவரைப் போன்ற மாணவர்களுக்குப் பயிற்சி தேவை என்பது புரிகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக, இந்தச் செயலியை உருவாக்கியுள்ளேன்; நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான தகவல்கள் இந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment