Sunday, 4 November 2018

தீபாவளி கொண்டாடவந்த இளைஞர் கைது!


மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை முகநூலில் விமர்சித்த நபர் வெளிநாட்டிலிருந்து தீபாவளி கொண்டாடவந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த வீரமுத்து என்ற நபர் சிங்கப்பூரில் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் 2017ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வீரமுத்து சிங்கப்பூரில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை. எனவே, வீரமுத்துவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளி கொண்டாட நேற்று முன்தினம் (நவம்பர் 2) காலை சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த வீரமுத்துவை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.

பின்னர், இந்த வழக்கு நேற்று (நவம்பர் 3) விசாரணைக்கு வந்தபோது தான் செய்தது தவறுதான் என வீரமுத்து மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செய்த தவற்றுக்கு ஊடகத்தின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

நீதிபதி உத்தரவின் பேரில் ஊடகத்தினரிடம் வீரமுத்து மன்னிப்பு கோரியுள்ளார்.

No comments:

Post a Comment