Tuesday, 27 November 2018

அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் அரோரா


இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுனில் அரோரா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் நேற்று இரவு செய்தி வெளியிட்டிருக்கிறது. அரோரா வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்பார் என்றும் பிடிஐ தெரிவிக்கிறது.

வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, அருணாசல் பிரதேஷ், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடக்க இருக்கிறது. இவற்றை நடத்தும் முக்கியப் பொறுப்பு சுனில் அரோராவிடம் இருக்கப் போகிறது.

ராஜஸ்தானில் இருந்து 1980ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய அரோரா மத்திய அரசிலும், ராஜஸ்தான் அரசிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் தோல்பூர், அல்வார், நாகுர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டராகப் பணியாற்றிய சுனில் அரோரா, 1993-98 பாஜக ஆட்சிக் காலத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த பைரான் சிங் ஷெகாவத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின் பாஜக முதல்வராக வசுந்தராஜே சிந்தியா ராஜஸ்தானில் பதவி வகித்தபோது அவரது முதன்மைச் செயலாளராக 2005 முதல் 2008 வரை பணியாற்றியவர்.

மத்தியில் பாஜக ஆட்சி செய்த 1999 -2002 காலகட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைச் செயலாளராக இருந்தவர் அரோரா. மேலும், ஏர் இண்டியாவின் தலைமை நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் அரோரா. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகவும் பதவி வகித்தார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரோரா, கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உடனேயே மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின் இந்திய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 2017 ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போதைய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தின் பதவி காலம் வரும் டிசம்பர் முதல் தேதியோடு முடிவடையும் நிலையில் அன்றே அரோரா தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்பார் என்றும், இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கார்ப்பரேட் தரகர் என்று கருதப்படும் நீரா ராடியாவுடன் அரோரா பேசியதாக வெளியான ஆடியோ பதிவுகள் இவரது ஐஏஎஸ் பதவி காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment