Friday, 26 October 2018

தலைமை செயலகத்தில் பாம்பு ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னை:தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில், இணை இயக்குனர் அலுவலகத்தில்,
சாரை பாம்பு புகுந்ததால், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில், 10 மாடிகளைக் கொண்ட, நாமக்கல் கவிஞர்
மாளிகை கட்டடம்
உள்ளது.
இதன் இரண்டாவது தளத்தின் கடைசிப் பகுதியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
நேற்று பகல், 1:00 மணி அளவில், இணை இயக்குனர் ரவீந்திரன் அலுவலகத்திற்குள், 6 அடி
நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று, புகுந்தது.
இதைக்கண்ட ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். உடனடியாக, கோட்டை வளாகத்தில் உள்ள, தீயணைப்பு
அலுவலகத்திற்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று, உயிருடன் பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இரண்டாவது மாடிக்கு பாம்பு வந்தது, ஊழியர்களிடம் பீதியை ஏற்படுத்தி
உள்ளது.
இந்த கட்டடத்திற்கு அருகே, புதர்மண்டி கிடப்பதால், அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் என, ஊழியர்கள் தெரிவித்தனர். புதர்களை அகற்ற, தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
தீயணைப்பு வீரர்களுக்கு தடை!
குடியிருப்புகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிக்க, தீயணைப்பு நிலையத்திற்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிப்பர். அவர்களும் விரைந்து சென்று, பாம்பு பிடிப்பர். தற்போது பாம்பு பிடிக்க, தீயணைப்பு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால், பிடிக்கும் போது பாம்பு இறந்துவிடுவதும், தீயணைப்பு வீரர்கள், சில நேரங்களில் பாம்பு கடிக்கு ஆளாவதுமே காரணம். இதனால் வனத்துறையை, பாம்பு பிடிக்க அழைக்க வேண்டியுள்ளது.
அனைத்து பகுதிகளிலும், வனத்துறை அலுவலர்கள் இருப்பதில்லை என்பதால், தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
   

No comments:

Post a Comment