பேருந்து வசதி இல்லாததால் அஞ்செட்டி அடுத்த மலைக்கிராம மக்கள் நடுநிலைப்பள்ளியுடன் கல்வியை கைவிட வேண்டி யுள்ளதாவும், பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் அத்திநத்தம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
பேருந்து வசதி இல்லாததால் மலைக்கிராம மாணவர்கள் கல்வியை கைவிடும் நிலை ஏற்படுவதால், பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பெற்றோர், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி அத்திநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஆட்சியர் அலுலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
அத்திநத்தம், சிவபுரம், ஜோடுஎகெரே, போடூர், நூரொந்து சுவாமி மலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் 2 அரசு தொடக்கப்பள்ளிகளும், 1 அரசு நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து வசதி இல்லாத காரணத்தால், மாணவர்கள் நடுநிலைப்பள்ளியுடன் கல்வியை கைவிடும் நிலை ஏற்படுகிறது. மாணவிகள் பலருக்கு 8-ம் வகுப்பு படித்தவுடன் இளம் வயதில் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக் கோரி, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவும் வகையில் அஞ்செட்டியில் இருந்து மலைக் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
No comments:
Post a Comment