Saturday, 27 October 2018

இந்திய டி20 அணியில் தோனிக்கு இடமில்லை!


மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி20 அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக கழட்டிவிடப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரையடுத்து அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இந்தத் தொடர் நவம்பர் 4ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதற்கான அணி நேற்று (அக்டோபர் 26) அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான தோனி, டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணிக்கு ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம், க்ருனால் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரினையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடருக்கான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த தொடருக்கான டி20 அணியிலும் மகேந்திர சிங் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மற்றபடி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்தவர்களே இந்தத் தொடரிலும் இடம்பிடித்துள்ளனர்.

டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை பார்த்திவ் படேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து பாதியிலேயே கழட்டிவிடப்பட்ட முரளி விஜய் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான கருண் நாயருக்கு இம்முறையும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், ப்ரித்வி ஷா, சதேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், பார்த்திவ் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார்.

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ்.

No comments:

Post a Comment