Tuesday, 9 October 2018

சமூகப் பணிகள் செய்தால் ரூ.1.5 கோடி வெகுமதி!

சமூகப் பணிகள் செய்தால் வெகுமதி!
சமூகப் பணிகளுக்காக புதுமைகளைக் கண்டுபிடிப்பதற்கு ரூ.1.5 கோடி வெகுமதி வழங்கப்படும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் தலைவரான சுதா மூர்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. எங்களிடம் குறைவான பணமே இருந்தது. ஆனால் தற்போது
அறிவிக்கப்பட்டுள்ள 2 விழுக்காட்டுக்கு (அரசு விதிமுறைகள்) நன்றி. இப்போது அதிக பணம் இருக்கிறது. ஆரம்பத்தில், எங்களிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டதோ அதைக் கொண்டு அடிப்படைத் தேவைகளைக் கவனித்து வந்தோம். நாங்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர விரும்பினோம். ஆனால் அதற்கு நிறைய பணம் தேவைப்படும். இந்த ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளோம். அதனால் எங்களது கண்டுபிடிப்பாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கும்.

கடந்த 3 - 4 ஆண்டுகளாக எங்களுக்கு வருவாயிலிருந்து 2 விழுக்காடு நிதி சமூகச் செயல்பாடுகளுக்காகக் கிடைக்கிறது. அதாவது ரூ.340 கோடி. கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம், கர்நாடகாவில் ஏற்பட்ட வறட்சி, ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட சூறாவளி உள்ளிட்ட 12 தேசிய பேரிடர்களை எங்களால் கையாள இயன்றது” என்று அவர் தெரிவித்துள்ளார். சமூகப் பணிகளுக்காக புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரும் தனிநபர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளில் மூன்று பேரைத் தேர்வு செய்து தலா ரூ.50 லட்சத்தை வெகுமதியாக வழங்க இன்ஃபோசிஸ் தீர்மானித்துள்ளது. சுகாதாரம், ஊரக மேம்பாடு, ஆதரவற்றோர் நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரலாம் என்று இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment