Saturday, 15 September 2018

பெல்ஜியத்தில் கொடி நாட்டிய தமிழகச் சிறுவன்!


முத்துப்பாண்டி யோகானந்த்

பெல்ஜியத்தின் ஒசாண்டேவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்கேட்டிங்கிற்கான ஃபிளான்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்குபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குரு ஹர்ஷன் எனும் 8 வயது சிறுவன் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 குரு ஹர்ஷனை சந்தித்து உரையாடியபோது, இவரது பயிற்சி குறித்தும், போட்டி அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். தனது ஸ்கேட்டிங் பயணம் தொடங்கியது குறித்துப் பேசிய அவர், "6 வயதில் ஸ்கேட்டிங் பயிற்சியைத் தொடங்கினேன். எனக்கு இப்போது 8 வயது ஆகிறது. கேகே நகர் சிவன் பார்க்கில்தான் எனது முதல் போட்டியில் பங்கேற்றேன். அதில் இரண்டாவது இடம் கிடைத்தது. SEMI PROFESSIONAL லெவல் ஸ்கேட்டிங்கை பெரம்பூர் ஷேன் பார்க்கில் தொடங்கினேன். பின்னர் பெரம்பலூரில் நடைபெற்ற ஸ்டேட் மீட்டில் கலந்துகொண்டேன். அதில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. அதன்பிறகு நடைபெற்ற கிளப் மீட் உள்ளிட்ட எல்லாப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வெண்கலம், வெள்ளி, தங்கம் என படிப்படியாக முன்னேறத் தொடங்கினேன். இதுவரை 21 போட்டிகள் விளையாடி, தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 18 பதக்கங்களை வென்றுள்ளேன்" என்று கூறினார்.

வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஆர்வம் வந்தது குறித்துப் பேசிய அவர், "ஆரம்பத்தில் கிளப் மீட் போன்ற சின்னச் சின்னச் ரேஸ்களில் கலந்து கொண்ட நான், அதிலிருந்து கிடைத்த உற்சாகத்தால் வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடத் தயாரானேன். சீனாவின் ஹைனிங்கில் நடைபெற்ற சர்வதேச ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நிகிலேஷ் தபானே, மைக்கேல் சார் இருவரும் என்னை அழைத்துச் சென்றனர். நிகிலேஷ் தபானே இந்தியாவின் அதிவேக ஸ்கேட்டர் என்றழைக்கப்படுபவர்.

பொதுவாக ஸ்கேட்டிங் செய்யும்போது வின்ட் ப்ளாக் இருந்தால் ஸ்பீட் எடுப்பது சிரமமாக இருக்கும். காற்றின் திசையை எதிர்த்து ஸ்கேட்டிங் செய்யத் தடையாக இருப்பதே வின்ட் ப்ளாக் ஆகும். சீனாவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றதால் வின்ட் ப்ளாக் குறித்த கவலை இல்லாமல் இருந்தது. அந்தப் போட்டியில் என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்தியா சார்பில் நிகிலேஷ் சார் வெண்கலம் வென்றார். அதைப் பார்த்து நானும் இதே போல் ஒருநாள் இந்தியாவிற்கு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது" என்று கூறினார்.பல்வேறு சவால்களைக் கடந்து பெல்ஜியத்தில் படைத்த சாதனை குறித்து விவரித்த குரு ஹர்ஷன், "பெல்ஜியத்தின் ஒசாண்டேவில் ஐரோப்பிய ஃபிளான்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. 20 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் வெவ்வேறு கிளப்பில் இருந்து 3 பேர் உட்பட இந்தியாவிலிருந்து மொத்தம் 12 பேர் கலந்து கொண்டோம்.

அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டிருந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் ஸ்வட்டர் இல்லாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் சூழ்நிலையை ஒப்பிடுகையில் அங்கு காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. அது போட்டியின்போது குறிப்பாக வளைவுகளில் எனக்கு வேகம் எடுக்க சாதகமாக இருந்தது. மொத்தம் 6 ரேஸ் இருந்தது. அதில் மழையின் காரணமாக ஒரு ரேஸை ரத்து செய்து விட்டனர். மீதம் உள்ள 5 ரேஸிலும் பல்வேறு சவால்களைக் கடந்து முதலிடம் பிடித்து கோப்பையை வென்றேன்" என்று கூறினார்.அவரது அடுத்த இலக்கிற்கான திட்டம் குறித்து கேட்டபோது, "உலக சாம்பியன் பட்டம் வென்று படிப்படியாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே எனது லட்சியம். ஸ்கேட்டிங்கைத் தாண்டி ஐஸ் ஸ்கேட்டிங் நீச்சல் ஆகிய விளையாட்டுகளின் மீதும் எனக்கு ஆர்வம் உள்ளது" என்று கூறினார்.பெரும்பாலும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் சிறுவர்கள் படிப்பில் கோட்டை விடுவதுண்டு ஆனால் குரு ஹர்ஷன் படிப்பிலும் முதலிடத்தைப் பெறுகிறார். இதற்கான ரகசியத்தைக் கேட்டபோது, "தினமும் காலை 4 மணிக்கு எழுவேன். 5 மணிக்கு அம்மா என்னை பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் செல்வார். தினமும் 5.30 முதல் 7 மணி வரை பயிற்சி செய்வேன். ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதலாகப் பயிற்சி எடுப்பேன். படிப்பு, விளையாட்டு இரண்டிற்கும் நான் தனித் தனியாக நேரம் ஒதுக்கிவிடுவேன். படிப்பிலும் கிளாஸ் ஃபர்ஸ்ட் வருவதால் அம்மா என்னை எதிலும் கட்டாயப்படுத்தமாட்டார். எனது பள்ளி ஆசிரியர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். தேவைப்படும் போது போட்டியில் கலந்து கொள்ள விடுமுறை அளிப்பதுடன் உற்சாகமும் வழங்குவர். எனது பள்ளி ஆசிரியர்கள், ஸ்கேட்டிங் பயிற்சியில் விஜய் மாஸ்டர் மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாஸ்டர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சொல்லி முடித்தார் அந்த சுட்டிச் சிறுவன்.

No comments:

Post a Comment