Wednesday, 12 September 2018

ஆதார் விவரங்களை திருட வெறும் 2,500 ரூபாய் தான்???


தனி நபர் அடையாள ஆணையம் UIDAI-யின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் விவரங்களை கொண்டுள்ள ஆதார் டேட்டாபேஸ், எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பது குறித்து கடந்த சில மாதங்களில் அதிக கேள்விகள் எழுந்து வருகின்றன. பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக அரசும் ஆதார் ஆணையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் ஆதார் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக விளக்கிக்காட்ட முயன்ற டிராய் தலைவர், ட்விட்டரில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். ஆனால், அதை வைத்து அவரது தனிப்பட்ட விவரங்களை தோண்டி எடுத்து, நெட்டிசன்கள் அவரை பாடாய் படுத்தி விட்டனர்.

இந்நிலையில், இணைய நிறுவனங்களின் பாதுகாப்பை உடைக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக பேட்ச் சாப்டவேர் மூலம் ஆதார் விவரங்களை திருடலாம் என ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.2500க்கு கிடைக்கும் அந்த சாப்டவேர், UIDAIன் பாதுகாப்பை தாண்டி, பொதுமக்களின் ஆதார் விவரங்களை பார்க்க வழிவகை செய்கிறதாம். ஒரு மாதமாக பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த பேட்ச் சாப்டவேரை ஆய்வு செய்து, இதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் கடந்து விடலாமாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் தடுத்து விடலாமாம். இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்கள் வேண்டுமானாலும், ஆதார் பாதுகாப்பை எளிதாக கடக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து UIDAI எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment