Thursday, 30 August 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல்: சிபிஐ விசாரணை வேண்டும்!


ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53,815 பேர் தேர்வெழுதினர். இந்தத் தேர்வில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த முறைகேடு குறித்து ராமதாஸ், “ஆசிரியர் தேர்வு வாரியமே முறைகேடுகளைக் கண்டுபிடித்திருந்தாலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை” என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்தி பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம்தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்ணைப் பட்டியலிடும்போது, கூடுதலாக சில மதிப்பெண்ணைச் சேர்த்து பதிவு செய்ததன் மூலம் அவர்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதுதான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால்கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதையத் தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில்தான் நடந்து கொண்டனர். ஆனால், இவர்களைத் தாண்டி இந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாகச் செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்துவிட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment