Saturday, 11 August 2018

தமிழகம்: பெருமழை அறிவிப்பு!!


தமிழகம்: பெருமழை அறிவிப்பு!
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் பெருமழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரக் கடல் பகுதியில் மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. “மேலடுக்குச் சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பெருமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான குமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே, சென்னையில் மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. இன்று (ஆகஸ்ட் 11) காலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதேபோன்று, குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் 48 மணி நேரத்துக்கு பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பில், தென்மேற்குப் பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. “அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக, கேரளாவில் பெய்துவரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment