Thursday, 30 August 2018

சென்னை: பள்ளிக்கு எதிராக வழக்கு!


சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்படுவதாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியானது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு புத்தகக் கண்காட்சி, மதப் பிரசங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றினால், அந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர் அங்குள்ள மக்கள். இது தொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த அஜன் பிரான்சிஸ் லயோலா உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“இந்தத் தெருவில் பங்களாக்கள் உள்பட 200 வீடுகள் உள்ளன. அருகேயுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் அநாதை விடுதியினால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்பள்ளி வளாகத்திலுள்ள திறந்தவெளி மைதானத்தில் வணிக நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக, அப்பள்ளியில் விடுமுறை விடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இங்கு புத்தகக் கண்காட்சி நடத்த, இங்குள்ள மைதானம் வாடகைக்கு விடப்படுகிறது. இது தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை விதிகளுக்கு எதிரானது. இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கி விடுகின்றனர். இவற்றினால் ஒலி மாசு, வாகன நெரிசல் ஏற்படுகிறது. எங்கள் தெரு முழுவதும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதுகுறித்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமி‌ஷனர், கீழ்ப்பாக்கம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தோம். பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக, போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

எனவே, வணிக ரீதியான நிகழ்ச்சிகளை இந்த மைதானத்தில் நடத்த புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று (ஆகஸ்ட் 29) நீதிபதி பிரகாஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “இந்தப் பிரச்சினைக்கு என்ன நடவடிக்கை எடுத்து தீர்வு காண முடியும் என்று போலீஸ் கமி‌ஷனர், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இதனால், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கிறேன்” என்று கூறி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment