Sunday, 12 August 2018

இடஒதுக்கீடு தொடரும்: பிரதமர்


சாதிவாரியான இடஒதுக்கீட்டை ஒழிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “அம்பேத்கரின் கனவு நிறைவேறும் வரை இடஒதுக்கீடு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு, என்ஆர்சி விவகாரம், ஜிஎஸ்டி, இந்தியா-பாகிஸ்தான் உறவு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 12) பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர், “சாதி வாரியான இடஒதுக்கீடு குறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?. சாதிவாரியான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு உங்களுடைய அரசாங்கம் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறுவது உண்மையா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம் மற்றும் அம்பேத்கரின் கனவும் ஆகியவை இன்னும் முழுமையடையாமல் உள்ளன. நாம் ஒவ்வொருவருக்கும் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு உள்ளது, இந்த இலக்கை எட்டுவதற்கு இடஒதுக்கீடு முக்கியமான கருவி. எனவே அதுவரை இடஒதுக்கீடு இருக்கும். அதுகுறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்.

அம்பேத்கரின் கனவுகள்தான் இந்த தேசத்தின் வலிமை. அதனை நாங்கள் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். ‘அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி’ என்பதே எங்களுடைய தாரக மந்திரம், இதனை அடைவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். ஏழை, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்று பதிலளித்தார்.

“முக்கியமான தேர்தல்களின்போது சில குழுக்கள் பாஜக இடஒதுக்கீட்டை ஒழித்துவிடும் என்று பிரச்னைகளை கிளப்புகின்றன. இதனை ஊடகங்களும் பெரிதாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து அவதூறு பரப்புபவர்கள் அம்பேத்கரின் கனவுகளை சிதைப்பவர்களாக உள்ளனர். அவர்கள் சந்தேக விதையை விதைப்பவர்களாக உள்ளனர்” என்று குறிப்பிட்ட பிரதமர், பரந்துவிரிந்து கிடக்கும் இந்தியாவில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக பாஜக உள்ளது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment