Thursday, 9 August 2018

கலைஞரை வணங்கிய இந்தியா!


அண்ணாவின் அன்புத் தம்பியாம் கலைஞர் என்னும் சூரியனை சந்தனப் பேழையில் வைத்து இந்திய தேசத்தின் முப்படையின் மரியாதையோடு நல்லடம் செய்திருக்கிறார்கள்.

அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்ற கலைஞரின் இறுதி நிகழ்ச்சியில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் புகழ் அஞ்சலியை செலுத்தினார்கள்.

ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் என்பது மட்டுமல்ல, மத்தியிலே பல பிரதமர்களை உருவாக்கியவர், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்தவர், இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் பின்பற்றப்படும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டவர் என்ற முறையில் இந்தியாவின் பல மாநிலங்கள் நேற்று சூரியனின் முகத்தைக் கடைசியாய் ஒருமுறை பார்க்க கண்ணீரோடு வந்திருந்தன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலைஞரின் இறுதி நிகழ்ச்சி வரை இருந்து கண்ணீர் செலுத்தினார்.

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத், ஃபரூக் அப்துல்லா ஆகியோர் வந்திருந்தனர். “எனது நாற்பது ஆண்டு கால நண்பர், வழிகாட்டியை இழந்துவிட்டேன்’’ என்று சின்னப் பிள்ளை மாதிரி கண்ணீர் சிந்திய்போது குலாம் நபி ஆசாத்தின் ஆப்பிள் முகம் சிவந்து போனது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன் தினம் இரவே சென்னை வந்து கோபாலபுரத்தில் கலைஞரின் உடலைக் கண்டு கண்ணீர் சிந்தினார். ‘’இந்தியா தன் நல்லதொரு மகனை இழ்ந்துவிட்டது’’ என்று வருந்தினார் அவர். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஜனநாயக மக்கள் சக்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய காந்தமாக செயல்பட்ட கலைஞரின் இழப்பை இப்போது நன்றாக உணர்வதாக கலங்கினார் மம்தா. அவரது சார்பாக கலைஞரின் இறுதி நிகழ்வில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன் கலந்துகொண்டார்.

கலைஞருக்காக இரு நாட்கள் துக்கம் அனுசரித்த பிகார் மாநிலத்தில் இருந்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வந்து அஞ்சலி செலுத்தினார். தன் தந்தை லாலுபிரசாத் யாதவுக்கும் கலைஞருக்குமான நெருக்கத்தை சொல்லிச் சொல்லி அவர் உருகினார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கலைஞரால் உருவாக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா வந்து தன் அஞ்சலியை செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியும், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியும் வந்திருந்தனர்.

ஆந்திராவில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன், ஒரு கட்சி என்றால் எப்படி தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஆற்காடு வீராசாமி மூலம் அப்போது கலைஞரிடம் இருந்துதான் என்.டி.ராமராவ் பெற்றார் என்பதை தன் நண்பர்களிடம் நினைவுகூர்ந்தார் சந்திரபாபு நாயுடு.

மராட்டிய மாநிலத்தில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கும் ராமதாஸ் அத்வாலே வந்து கலைஞருக்கு மராட்டிய மண் சார்பாக அஞ்சலியை செலுத்தினார். மராட்டியத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான சரத்பவார் தனது உடல் நலம் குன்றிய நிலையிலும் கலைஞரைக் கண்டு கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். மாயாவதி சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியினர் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தோடு வந்து கலைஞரைப் பார்த்து கண் கலங்கினார். கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் சதாசிவமும் வந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

ஒட்டுமொத்த தென்னிந்தியா மட்டுமல்ல,பரவலான வட இந்திய மாநிலங்களும் கலைஞருக்கு தங்கள் மரியாதையை நேரில் வந்து தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment