Friday, 24 August 2018

உதயச்சந்திரன் இடமாற்றம்.. கல்வியாளர்கள் வருத்தம்.. மீண்டும் பணியில் நியமிக்க கோரிக்கை!!


பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்த உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.

உதயச்சந்திரன் கல்வித்துறையில் நவீன புரட்சியை ஏற்படுத்தியவர். ஜனநாயக மாண்பு தழைக்க தமது பணியினை செய்தவர். வெகுஜன மக்களின் இதயத்தில் வெகுசீக்கிரத்திலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டவர்.

இப்போது இவரது பணியிட மாற்றத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும்? பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் இனி எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? உதயச்சந்திரனின் இடமாற்றத்தின் தாக்கங்கள் என்னென்ன? என்பது குறித்து சில கல்வி துறை அதிகாரிகளிடம் "ஒன் இந்தியா தமிழ்" கருத்து கேட்க முற்பட்டது. அதன் தொகுப்பு:


நந்தகுமார் (தமிழ்நாடு பிரைமரி, நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர்)பள்ளிக் கல்வித்துறையில் உதயசந்திரன் பணியாற்றிய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 754 தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகள் இடப்பற்றாக்குறை காரணமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் தத்தளித்து கொண்டிருந்தது. இது சம்பந்தமாக அவரிடம் எடுத்துரைத்தபோது வல்லுநர் குழு ஆய்வறிக்கையின்படி, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காமல் அங்கீகாரம் கிடைக்க உதவிகளை செய்தார்.

 முற்றுப்புள்ளி வைத்தார்
எறியப்பட்ட கிரேட் சிஸ்டம்
10 மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம், மாவட்ட அளவில் முதலிடம் என்று மதிப்பெண்களை போட்டுக் கொண்டு சில பள்ளிகள் கொள்ளை அடித்து கொண்டிருந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் உதயச்சந்திரன்தான். இந்த 1, 2, 3 என்ற கிரேட் சிஸ்டத்தை தூக்கியெறிந்து வெறும் மதிப்பெண்களை மட்டுமே மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.

 
அல்லலுற்ற மாணவர்கள்
தரமான கல்வி பயில வாய்ப்பு
11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீண்ட காலம் மாற்றம் செய்யப்படாமல் தமிழகம் பின்தங்கி இருந்தது. அதனால் நீட் போன்ற அகில இந்திய பொதுத்தேர்வுகளான நீட் போன்றவற்றினை மாணவர்கள் எழுத முடியாமல் அல்லலுற்று வந்தனர். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நன்கொடையாக கொடுத்து ஏமாந்திருந்த ஒரு காலகட்டத்தில், இதற்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்தார். அதாவது உடனடியாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, எம்சிஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பல வண்ணங்களில் மாணவர்கள் தரமான கல்வி பயில வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறார்.

 
பாதியிலேயே ஏன் டிரான்ஸ்பர்?
மன உளைச்சலாக உள்ளது
இந்த ஆண்டு முழுமையாக பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு முழுமையான பயிற்சிகளும் அளிக்கப்பட்ட பின்னர்தான் அவர் பணியிட மாற்றம் செய்திருக்க வேண்டும். இப்படி பாதியிலேயே அவரை மாற்றியிருப்பதால், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சம் கல்வியியலாளர்கள் மத்தியில் எழுகிறது. பாடத்திட்டம் மாற்றப்பட்டு, அதற்கான புத்தகங்கள்கூட முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேரவில்லை. இதுமட்டுமல்லாமல் மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்


பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு நிறுவனர், கல்வியலாளர்)கர்மவீரர் காமராஜர் காலத்தில் நெ.து.சுந்தரவடிவேலு என்ற கல்வி அதிகாரி இருந்தார். அந்த உன்னத மனிதர், காமராஜர் கல்வித்துறை குறித்து என்ன நினைத்தாரோ அதற்கு ஒரு செயல்வடிவம் தந்தார். தந்தை பெரியார் விரும்பிய அனைவருக்கும் கல்வி என்கிற திட்டத்தை, கொண்டு வந்தவர் காமராஜர். அதனால்தான் அவரது ஆட்சியில் நெ.து.சுந்தரவடிவேலு, சீருடை, சத்துணவு என புதிய திட்டங்களை கொண்டு வந்ததுடன், பள்ளி செல்லும்போதெல்லாம் மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவும் சாப்பிடுவார். எப்படி நெ.து.சுந்தரவடிவேலு விரும்பி தன் பணியினை செய்தாரோ, அவருக்கு பின் தன் பணியினை விரும்பி ஏற்று செய்தவர் உதயச்சந்திரன்.

 
அழைத்து பேசினார்
கல்வித்துறையில் ஜனநாயகம்
இதன் பயன் என்னவென்றால், எல்லா ஆசிரியர்களையும் அழைத்து பேசினார். எல்லோரிடமும் இருந்த நிறை-குறைகளை ஆராய்ந்தார். நிறை இருக்கக்கூடிய நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை வைத்தே குறைகளை களையும் முயற்சிகளை மேற்கொண்டார். ஜனநாயக தன்மையோடு பள்ளிக்கல்வித்துறையை நடத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறை செயலர் என்ற பொறுப்பிலிருந்து கல்வித்திட்டம் என்னும் சிறிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டார். ஆனாலும் அங்கிருந்துகொண்டே பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்தும்கூட அவரை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 
சிறந்த திட்டம்
மீண்டும் வரவேண்டும்
இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தமிழகத்தில் கிளம்பின. எனினும் சென்னை ஐகோர்ட்டின் தலையீட்டினால் அதிலேயே தொடர்ந்து பணியாற்றினார். 'நாம் படிக்கும் பாடம் சிறந்தது' என்ற கல்வித்திட்டம் குறித்த நம்பிக்கையை பெற்றோர், மாணவர்கள் மனதில் விதைத்தவர். அதனால் பெரும் வரவேற்பை பெற்றவர். அந்த பாடத்திட்டத்திற்கான பயிற்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பாடத்திட்ட நூல்கள் தயாராகி கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அவரை பணியிட மாற்றம் செய்ய அவசியம் இல்லை. உதயச்சந்திரன் மீண்டும் அதே பொறுப்புக்கு வருவார், வரவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். அதே பணியில் அவரை தமிழக அரசு நியமிக்க ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment