Monday, 27 August 2018

கேரளாவில் கடல் மட்டம் உயரும் : மத்திய அரசு எச்சரிக்கை!


கேரளாவில் கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் உருவாகி வருவதாக மத்திய அரசின் புவியியல் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட கடுமையான சேதங்களிலிருந்து தற்போதுதான் அந்த மாநிலம் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் கடல் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் புவியியல் துறை அமைச்சர் மாதவன் ராஜீவன் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில், அரபிக்கடல் உஷ்ணமாகி வருவதால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடல்களின் மட்டம் உயருவதற்கான அபாயம் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையைத்தொடர்ந்து, ஒரு பொருளாதார ஆராய்ச்சிக்குழுவின் ஆய்வு (National Bureau of Economic Research-NBER) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடல் மட்டம் உயர்ந்து உருவாகும் வெள்ளப்பெருக்கு உலகப்பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் இதனால் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். கடலோரம் உள்ள கிராமங்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் தீவுகள் ஆகியவை மூழ்கும் அபாயம் ஏற்படும். இதன் விளைவாக பெருமளவில் மக்கள் இடம் பெயர்வார்கள் என்று எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் பாங்காக் மற்றும் ஹோசிமின் சிட்டி ஆகிய நாடுகளும் நகரங்களும் கடுமையான அளவில் பாதிக்கப்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான பேரிடர் மேலாண்மைத்திட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment