Saturday, 11 August 2018

பாதுகாப்பில் குறைபாடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!


கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்த ராகுலுக்கான பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், “சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் காலமானதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 8ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். ராஜாஜி அரங்கத்தில் அவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது அவருக்கு தமிழக காவல் துறையினர் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ராகுல், சிறிது நேரத்திற்கு பிறகே கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராகுலுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.

ராஜாஜி ஹாலில் நடந்தவற்றை குறிப்பிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கையில், “கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு ராகுல்காந்தி வந்த போது நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே அவர் செல்லும் வழியில் குழுமியிருந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்திய பிறகு முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையின் வழியாக பொதுமக்கள் நுழைய காவல் துறையினர் அனுமதித்தது அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற பதற்றத்தை ஏற்படுத்தியது” என்று விமர்சித்துள்ளார்.

அலைக்கழிக்கப்பட்ட ராகுல்

“இறுதி அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்த போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு இடையே பலவந்தமாக ராகுல்காந்தி அழைத்துச் செல்லப்பட்டது அவரது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டது. சிறப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிற ராகுலை இந்த வகையில் அழைத்துச் செல்லும் போது ஏறத்தாழ அரை மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டார். மிகுந்த சிரமத்திற்கிடையே மக்களின் நெரிசலுக்கிடையில், இடிபாடுகளுக்கிடையே அவர் அழைத்துச் செல்லப்பட்டார்” என்று குறிப்பிட்ட திருநாவுக்கரசர், அவரை அழைத்துச் செல்ல உரிய பாதையை காவல் துறையினர் அமைக்கவில்லை. பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சுவர் ஏறி வெளிவந்தார்

“இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ராகுல் காந்தி திரும்பி வெளியே வர உரிய பாதையை காவல் துறையினர் அமைத்துக் கொடுக்காததால் நாற்காலியை பயன்படுத்தி பின்புற மதில் சுவர்மீது ஏறி வெளியே வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது” என்று கூறிய அவர், எதிர்காலத்தில் பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய வாய்ப்பு பெற்ற மாபெரும் தலைவரை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரை தமிழக காவல் துறையினர் குண்டும் குழியுமாக குப்பை மேடாக, சேறும் சகதியுமாக இருந்த பகுதியில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாக்கியதாகவும், சரியான பாதுகாப்பு தரவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை வேண்டும்

சிறப்பு பாதுகாப்பு பிரிவின் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு உட்பட்டுச் செல்ல வேண்டிய திரு. ராகுல் காந்தி அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டது குறித்து ராஜாஜி ஹாலுக்கு பொறுப்பேற்றிருந்த சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருநாவுக்கரசர், இந்த நடவடிக்கையின் மூலமே எதிர்காலத்தில் இத்தகைய பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment