Saturday, 11 August 2018

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள்!


ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

நரம்பு மண்டலும் நமது உடலில் முக்கிய பணியாற்றி வருகிறது. இது தான் அறிவாற்றல் மற்றும் உடலின் முக்கிய இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது. சிலர் எப்போதும் சோர்வாக இருப்பார்கள். எதையும் புதியதாய் அறிந்துக் கொள்ள, கற்றுக்கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள்.

இதற்கு காரணம் அவர்களது நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் அழுத்தம் மற்றும் சோர்வு தான். இதை சரி செய்ய, சீரான முறையில் உடற்பயிற்சியும், சில உணவுகளை உட்கொள்ளவும் வேண்டும். சரியான ஊட்டச்சத்துக்கள் இன்றி உங்களது நரம்பு மண்டலத்தை நீங்கள் சரி செய்ய முடியாது.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம்.

எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும்.

எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம்.

கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

பச்சை காய்கறிகளில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 அதிகம். இவை, ஹோமோசைஸ்டீன் உண்டாகாமல் தடுக்கிறது. இந்த ஹோமோசைஸ்டீன் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் உண்டாக்கக் கூடியது ஆகும்.

மேலும் இது அல்சைமர் மறதி நோய் உண்டாகாமலும், தமனிகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.
பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது.
இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.
முழு தானியங்களில் வைட்டமின் பி6 இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. இது மூளையின் செயற்திறனை அதிகரிக்கிறது. மேலும், இதில் இருக்கும் மெக்னீசியம் அறிவாற்றலை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்க முழு தானியங்கள் சிறந்த உணவாகும்.

மது அருந்துவதற்கு பதிலாக ரெட் ஒயின் அருந்துவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் குடிப்பது மூளையின் செயற்திறன் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயலாற்றலை அதிகரிக்க செய்கிறது.

No comments:

Post a Comment