Monday, 27 August 2018

வெள்ளத்துக்கு 993 பேர் பலி: உள்துறை அமைச்சகம்!


இந்தாண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள் துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தாண்டு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 400 பேரும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கர்நாடகாவில் 161 பேரும், அஸ்ஸாமில் 46 பேரும் பெருமழை பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரளாவில் மழை வெள்ளத்தால் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 14.52 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அஸ்ஸாமில் 11.46 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2.45 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2.4 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,800 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கர்நாடகாவில் 3.5 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,800 பேர் முகாம்களில் தங்கினர்.

2005ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் 1,600 பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் பெருமழை பாதிப்பினால் ரூ.4,745 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்தம் 1,200 பேர் உயிரிழந்தனர். பீகாரில் 514 பேரும், மேற்கு வங்கத்தில் 261 பேரும், அஸ்ஸாமில் 160 பேரும், மகாராஷ்டிராவில் 124 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 121 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னர் இழப்பீடு கோருவதற்குப் பதிலாக, மாநிலங்கள் தங்களது பட்ஜெட் தாக்கலின்போது இயற்கைப் பேரிடர் மேலாண்மைக்குத் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment