Thursday, 30 August 2018

உஷார்..! புதிய 500, 2000 ரூபாய்களில் கள்ள நோட்டுகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கையில் "பகீர்" தகவல்..!


போலியாகத் தயாரிக்க முடியாது ..பாதுகாப்பு..! என்றெலாம் கூறப்பட்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்ததன தொடர்ச்சியாக கள்ளநோட்டுகளே அச்சடிக்க முடியாத வகையில், புதிய வடிவத்தில் ரூ.500, ரூ.2000, ரூ.200, ரூ.50, ரூ.10 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரிசையாக வெளியிட்டது.

இந்நிலையில், கள்ளநோட்டுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வி அடைந்துள்ளது ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.


புதிய வடிவத்தில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டுவந்தும் கள்ளநோட்டுகள் வருகை தொடர்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் கள்ளநோட்டுகள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

புதிய ரூ.500 நோட்டுகளில் கள்ளநோட்டுகள் கடந்த 2016-17-ம் ஆண்டில் 199 எண்ணிக்கையில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஓர் ஆண்டில் 2017-18-ம் ஆண்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 892 கண்டுபிடிக்கப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரை, கடந்த 2016-17-ம் ஆண்டில் 638 எண்ணிக்கையில்தான் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்த ஓர் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு எண்ணிக்கை 17 ஆயிரத்து 929 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ரூ.100, ரூ.50 நோட்டுகளிலும் கள்ளநோட்டு பிடிபட்டது அதிகரித்துள்ளது. 50 ரூபாய்களில் கள்ளநோட்டு பிடிபட்ட எண்ணிக்கை 154 சதவீதம் அதிகரித்து 23 ஆயிரத்து 447 நோட்டுகள் பிடிபட்டன.

100 ரூபாய்களில் கள்ளநோட்டுகள் பிடிபட்டது 35 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 182 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும்,கடந்த 2016-17-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளைக் காட்டிலும், 2017-18-ம் ஆண்டில் கள்ளநோட்டுகள் பிடிபட்டதன் எண்ணிக்கை 31 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் வங்கிமுறையில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 783 நோட்டுகள் அதாவது 63 சதவீதம் பிடிபட்டுள்ளன, மற்றவை ரிசர்வ் வங்கி மூலம் பிடிபட்டுள்ளன.

இவை தவிர, தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளான 500, 1000 நோட்டுகள் கண்டுபிடிப்பதன் எண்ணிக்கையும் கடந்த 2017-18-ம் ஆண்டில் முறையே 59.7 சதவீதம், 59.6 சதவீதம் குறைந்துள்ளது.

வங்கிப் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் 2018-ம் ஆண்டு மார்ச்மாதம் அடிப்படையில் 37.7 சதவீதம் உயர்ந்து, ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 700 கோடி உள்ளன. ரூ.2000, ரூ.500 நோட்டுகளின் புழக்கமும், மதிப்பின் அடிப்படையில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 500 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அழிக்கப்பட்ட நிலையில், நடப்பு 2018-19-ம் ஆண்டில் 27 ஆயிரத்து 700 கோடி நோட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.

என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment