Saturday, 25 August 2018

நிவாரணப் பொருட்களை திருடிய 2 வி.ஏ.ஓ. கைது!


கேரளாவில் நிவாரணப் பொருட்களைத் திருடிய இரண்டு வி.ஏ.ஓ. அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் பெய்த பெருமழை கேரளாவை புரட்டிப் போட்டது. எப்போதும் இல்லாத அளவுக்குப் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மக்கள் மீண்டு வருவதற்காக அண்டை நாடுகள்,மாநிலங்கள், தனிநபர்கள் என அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பனமரம் பகுதியில் சிறப்பு கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் (42), உதவி அதிகாரி தாமஸ் (41) ஆகிய இருவரும் நிவாரணப் பொருட்களைத் திருடியுள்ளனர். பனமரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் ஏராளமான நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முகாமுக்கு நேற்று(ஆகஸ்ட் 24) இரண்டு அதிகாரிகளும் லாரி எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் மூட்டை மூட்டையாக எடுத்து லாரியில் அவசர அவசரமாக ஏற்றினர். இவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, வேறு முகாமிற்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன எனக் கூறினர்.

அவர்களின் பேச்சை நம்பாத மக்கள் மானந்தவாடி தாசில்தாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசாருடன் விரைந்த தாசில்தார் மானந்தவாடி கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 பேரும் நிவாரண பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மானந்தவாடி தாசில்தார் கூறும்போது, முகாமில் உணவுப்பொருட்கள் திருடிய இரண்டு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன். நிவாரண முகாமில் அரசு அதிகாரிகள் திருடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த செயலை செய்த அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட் 25) மானந்தவாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment