Sunday, 12 August 2018

மழை வெள்ளத்தில் மலையாள தேசம்! (முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஆகஸ்ட் 11) நேரில் ஆய்வு)



தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்துள்ளன.

பலி எண்ணிக்கை

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது மழை பெய்து மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆக உயா்ந்துள்ளது.


கேரள அணைகளின் நிலவரம்

  மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 22 அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இடுக்கி அணையின் 5 மதகும் 26 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது.

அணைகள் திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளமாக ஓடுகிறது. 40 ஆறுகளும் கரை புரண்டு ஓடுகின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.


முதல்வர் ஆய்வு



மழை வெள்ளத்தால் கேரளாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோா் ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஆகஸ்ட் 11) நேரில் ஆய்வு செய்தனா். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் சென்று மாநிலத்தின் பாதிப்பை பார்வையிடுவது என்பது கேரளத்திடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய வெள்ளப் பாடம்.

மேலும், வயநாடு பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வா் பினராயி விஜயன் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் ஆறுதல் கூறினா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பினராயி விஜயன், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், வீடு மற்றும் நிலங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


மீட்புப் படையினர்



பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கு ஆபரேஷன் சஹயா என்று பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் ராணுவத்தினர் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர். இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 40 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பல வீடுகள் தீவு போன்று ஆகியுள்ள நிலையில் ராணுவத்தினர் தற்காலிக பாலங்கள் அமைத்து அவர்களை மீட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நிதி உதவி

கேரள அரசின் சார்பில் நிதியுதவியும் கோரப்பட்டு அதற்கான வங்கி எண்ணும் முதல்வர் பினராயி விஜயனுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமியும் அறிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு உதவும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.


பிரார்த்தனை

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலம்பெற வேண்டுவதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், துல்கர் சல்மான் மற்றும் பலர் தெரிவித்துள்ளனர்.


ராஜ்நாத் சிங் வருகை

மழை வெள்ளம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் விசாரித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 12) நேரில் பார்வையிடுகிறார்.


மத்திய அரசு உதவ வேண்டும்

அண்டை மாநில அரசுகளும் தனிநபர்களும் கேரள அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழக அரசு ரூபாய் 5 கோடி அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இன்னும் நிவாரணத் தொகை எதையும் அறிவிக்கவில்லை. ஓக்கி புயல் தாக்கியபோது பாராமுகமாக இருந்தது போல இப்போதும் மத்திய அரசு இருந்துவிடக் கூடாது. கேரளாவைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பதுடன், உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5,000 கோடி தொகையை முதல் தவணையாக கேரள அரசுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

வானிலை எச்சரிக்கை

இந்த நிலையில் மேலும் நான்கு நாட்களுக்குக் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடவுளின் சொந்த பூமி என்று கேரளாவைச் சொல்வார்கள். அங்கே கோயில்களும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment