Sunday, 8 July 2018

மத்திய அரசு திட்டம்: 800 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!


மத்திய அரசின் திட்டங்கள், மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரடியாகக் கண்டறிய 800 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஜீவன் ஜோதி பீமா யோஜனா, ஸ்வாஸ்த்ய யோஜனா, ஜன்தன் யோஜனா, சுகன்யா சம்விருத்தி யோஜனா, முத்ரா யோஜனா உள்ளிட்ட 7 மக்கள் நலத் திட்டங்களை நாடு முழுவதும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றுவதில் மந்தம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு, 800 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 117 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கண்காணித்து ஆய்வு நடத்த உள்ளனர்.

இதற்காகப் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அமைச்சகங்களில் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள துணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநரக அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அடுத்த இரண்டு மாத காலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்த அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று கிராம மக்கள் மற்றும் பயனாளிகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தவுள்ளனர்.

49,178 கிராமங்களில் இந்த அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் பிரதிநிதிகளுடன் இணைந்து கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்கு மற்றும் மின் இணைப்பு போன்றவற்றை உடனுக்குடன் சரிசெய்வது இவர்களின் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment