Monday, 11 June 2018

கண்காணிப்போம் ! கல்வி காப்போம் !!

கண்காணிப்போம் ! கல்வி காப்போம் !
வே.வசந்தி தேவி
----------------------------------------------------------------

கல்வி ஆண்டு தொடங்குகிறது. குழந்தைகளின் குறுகிய ஒரு மாத கால குதூகலம் முடிந்தது. நமது கல்வி அமைப்பின் அவலங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முன்னிறுத்தி, சிந்திக்க வேண்டிய நேரம்.

பாடத்திட்ட மாற்றம் இவ்வாண்டின் பாராட்டிற்குரிய பெரும் சாதனை. ஆனால், பாடத் திட்டம் மட்டுமே இன்றைய பிரச்சனை அல்ல. கல்வி அமைப்பே பிரச்சனை. கொடிய ஏற்றத் தாழ்வுகள் கொண்டு, தனியார் மயமாகி, வணிகமயமாகிக் கிடக்கும் அமைப்பே பெரும் பிரச்சனை. பொறுப்பேற்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள் கல்வியை சந்தைக்கு விட்டுவிட்டு, விலகிக் கொண்டுவிட்டன. அரசை வலியுறுத்தி கடமை ஏற்க வைக்கும் பரந்துபட்ட வலுவான மக்கள் இயக்கங்கள் இல்லை.

அனைத்து மட்டத்துக் குழந்தைகளுக்கும், குறிப்பாக, அடித்தட்டு, விளிம்பு நிலைக் குழந்தைகளுக்குப்   பெரும் துரோகம்  இழைக்கப்படுகிறது. நடுத்தர வர்க்க மக்கள் தாங்களும் இக் கொள்கைகளின் பலிகடாக்கள் என்பதை உணராமல், பயனாளிகள் என்ற மயக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

 கல்வி இன்று அனைத்துக் குடும்பங்களின் மிகப் பெரும் தவிப்பு. அடித்தட்டு, கீழ்-நடுத்தர வர்க்க மக்கள் மீள முடியாத கல்விக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்தையும் இலவசமாக அளிக்கும் அரசுப்  பள்ளிகளை விட்டு, மாணவர் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அரசுப் பள்ளிகள் நூற்றுக் கணக்கில் மூடப்படுகின்றன என்ற செய்தி வருகிறது. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற உண்மையோ, பிரமையோ, எப்படி மாற்றுவது?

மறு பக்கம், தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமானவை என்ற மற்றொரு பெரும் மாயை. தனியார் கைப்பாவையாக அரசு மாறிவிட்ட காலத்தின், ஒரு பிரபஞ்ச சதியின் ஓர் அங்கம். இதில் மறைக்கப்படும் உண்மை, தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் அங்கீகாரமே இன்றி, இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அங்கீகாரம் பெறுவதற்கான தரமற்றவை என்பதுதான் உண்மை. அரசு அதைக் கண்டு கொள்ளாமலும், கட்டணக் கொள்ளை நடப்பதைத் தடுக்காமலும் இருப்பதே அவலங்களின் அடிப்படைக் காரணம்.

கொடூரமான போட்டி உலகம் ஒன்று கல்வியில் உருவாகி இருக்கிறது. மனிதனை மனிதன் விழுங்கும் அந்தப் போட்டி உலகத்திற்குக் குழந்தைகள் காவு கொடுக்கப்படுகிறார்கள். கல்வி முழுதும் மார்க்கெட்டின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். அதன் நுகர்வோரான பெற்றோர்-மாணவர்களைத் தன் வசப்படுத்தும் அனைத்து மந்திர-தந்திரங்களையும் தனியார் பள்ளிகள் கையாளுகின்றன.

சம தளமே அற்ற ஒரு உலகில், மிகப் பெரும் பகுதியான வசதியற்றோர், பல மட்டங்களில், பல யுக்திகளின் வழியே, வாய்ப்பு வட்டங்களிலிருந்து வெளியே விரட்டப்படுகிறார்கள்.

கல்வி உரிமைச் சட்டம்  

பல்லாண்டுப்  போராட்டங்களுக்குப் பின் கல்வி உரிமைச் சட்டம், 2009, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் பல குறைகள் இருப்பினும், இன்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும், ஓரளவேனும் தரமான, இலவசக் கல்வியை உத்திரவாதம் செய்யும், சட்டம் இதுதான். ஆனால், நாடு முழுவதிலும் 10% பள்ளிகள்தான் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கின்றன என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.

சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அரசுகள் பொறுப்பற்று இருக்கும்போது, சட்டம் குறித்த புரிதல் மக்களிடையில் முற்றிலும் இல்லாத நிலையில், கல்வி என்ற அடிப்படை வாழ்வாதாரத்தைப் பெறுவது எப்படி?  நிலைமைக்கான மாற்றை எங்கே தேடுவது? ஜனநாயக நாட்டில் மாற்றம் பிறக்கும் மூலாதாரம் மக்கள் சக்தி ஒன்றே.

மக்கள் கையில் அதிகாரம்

சில மாநிலங்களில் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தை ( Right to Information Act, RTI ) மக்கள் கருவியாகக் கையில் எடுத்து, இயங்காத அரசு இயந்திரத்தை ஓரளவேனும் இயங்க வைத்திருக்கிறனர். ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் கூர்ந்து கண்காணித்து,  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை நன்கு செயல்பட வைத்திருக்கிறார்கள்

அவற்றைப் போல், கல்வியில் சட்டம் அளித்திருக்கும், ஆனால், நடைமுறையில் பொய்த்துப் போயிருக்கும் அதிகாரங்களை மக்கள் கையிலெடுக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு

கல்வி உரிமைச் சட்டம், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை மேற்பார்வை பார்க்கும் அதிகாரமும், பள்ளிக்கு வேண்டிய திட்டமிடும் அதிகாரமும் பள்ளி மேலாண்மைக் குழுவிடம்தான் அளித்திருக்கிறது.

இது என்ன குழு? யார் இதன் உறுப்பினர்? இருபது பேர் கொண்ட இக் குழுவில் 75%  பெற்றோர், பாதிப் பேர் பெண்கள், ஆசிரியர், உள்ளாட்சி உறுப்பினர், வெளியிலிருந்து ஒரு ஆர்வலர்.

குழுவின் அதிகாரங்கள் : பள்ளிக்கு அனைத்துத் தேவைகளும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்தல்; அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, அவற்றைப் பெறுதல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல், நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுவதைக் கண்காணித்தல், ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதையும், நன்கு கற்பிப்பதையும் உறுதி செய்தல் மற்ற பல.
இத்தனை அதிகாரம் கொண்ட குழுக்கள் நம் பள்ளிகளில் இருக்கின்றனவா? இயங்குகின்றனவா?

குழுக்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. பள்ளித் தலைமை ஆசிரியரோ, மற்றவரோ தன்னிச்சையாகக் குழுக்களை அமைக்கின்றனர். கூட்டம் நடந்ததாகக் கையேட்டில் எழுதி, உறுப்பினரின் கையேழுத்தைப் பெறுகின்றனர். பள்ளியில் எந்த மாற்றமும் நடப்பதில்லை.   குழுக்கள் திறம்பட இயங்கினால் தானே  பள்ளிகளின் பல குறைகள் தீர்க்கப்படும்?பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சட்டப்படி அமைக்கப்பட வேண்டும். பள்ளியின் மேற்பார்வை முழுமையாகக்  குழுவின் கையில் இருக்க வேண்டும்.பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய தரவரைவுகள் ( Norms and Standards)

ஒவ்வொரு பள்ளியிலும் எத்தகைய அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் விரிவாகக் கூறுகிறது. அனைத்து அரசு, உதவி பெறும், தனியார், கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளிலும் அவசியம் இருக்க வேண்டிய  உள்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், தண்ணீர், விளையாட்டு மைதானம், நூலகம் போன்றவையும், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் தகுதி அனைத்தும் சட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. இவை இல்லாத பள்ளிகள் இழுத்து மூடப்பட வேண்டும். பல பள்ளிகளில் கழிப்பறை உண்டு, தண்ணீர் இல்லை; போதுமான ஆசிரியர் இல்லை. பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை; கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர் இல்லை.

கல்வி உரிமைச் சட்டம் விதித்துள்ள தரங்கள் எல்லாப் பள்ளிகளிலும் நிறைவேற்றுவது அரசின் கடமை. இவற்றைக் கண்காணிப்பது குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு.  நிறைவேற்றத் தவறுவதும், கண்காணிக்கத் தவறுவதும் சட்ட மீறல் மட்டுமல்ல. குழந்தை உரிமை மீறல் குற்றமுமாகும்.

ஒவ்வொரு ஊர் பள்ளியிலும் இந்த அடிப்படைகள் இருக்கின்றனவா என்பதைப் பள்ளி மேலாண்மைக் குழு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி,  உறுதி செய்ய வேண்டும்.

மாணவர் பங்கேற்பு

கல்வியின் பயனாளிகள் (stakeholders) மாணவர்கள்; அதன் பங்குதாரர்களாக  ( share holders)  அவர்களை ஏற்று, உரிமைகளை அவர்களுக்கு அளித்தால், அதன் பாதுகாவலர்களாகவும் திகழ்வார்கள். பள்ளியின் குறைகளைப் பட்டியலிட்டு, மாற்றம் தேட, மற்றவர்களை உந்துவார்கள்.

கிராம சபைகள் :

அடுத்து, பள்ளிகள் கிராம சமுதாயத்தின் விலையுயர்ந்த சொத்து; அவற்றை மேம்படுத்துவது அதன் பொறுப்பு. ஆனால், கல்விப் பிரச்சனைகள் கிராம சபைக் கூட்டங்களில் எழுப்பப்படுவதே இல்லை.

கிராம சபைகள்தான் இந்திய ஜனநாயகத்தின் ஆதார அமைப்புகள். உள்ளுர் சமுதாயம் குறித்த அனைத்து அதிகாரங்களும் அதன் கையில்தான் உள்ளன. ஆனால், கிராமசபைகள் நகைப்புக்குரியனவாக சீரழிந்து கிடக்கிறன. அவற்றின் அதிகாரமனைத்தும் நடைமுறையில் பறிக்கப்பட்டு, அதிகாரிகளும், அரசியலாளரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இன்று தமிழ் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் இல்லை என்பதனால் மட்டும் அல்ல; அதற்கு முன்னும் இதே நிலைதான். ஆண்டு முழுவதும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே கூட வேண்டும்; ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த தீர்மானங்களை மட்டுமே, மாநிலத்தின் அனைத்து கிராம சபைகளும் நிறைவேற்ற வேண்டும்.  கேரளாவில் கிராம சபைகள் சிறப்பாக இயங்கி, தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன.

கிராம சபைகள் தங்கள் ஊர் அரசு, தனியார் பள்ளிப் பிரச்சனைகள் குறித்தத் தீர்மானங்களை நிறைவேற்றி, நடை முறைப்படுத்த வேண்டும்.

என்ன ஆயிற்று எங்கள் வரிப்பணம்?

நாடு முழுதும், அனைத்துப் பொருட்கள் மீதும் 3% கல்வி வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும், நகர சபையிலும், மாநகராட்சியிலும் வசூலிக்கப்படும் கல்வி வரி, அப் பிரிவுப் பள்ளிகளுக்கு செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது? அது எங்கே போகிறது என்பது யாருக்கும் தெரியாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பஞ்சாயத்து / நகரம் / மாநகரம் ஆகியவற்றில் வசூலிக்கப்படும் வரித் தொகை குறித்த விவரங்கள் பெறப்பட்டு, தங்கள் பகுதி அரசு பள்ளிகளுக்கு செலவழிக்க வற்புறுத்தலை உருவாக்க வேண்டும்.

ஊருக்குப் பத்துப் பேர்

பூனைக்கு மணி கட்டுவது யார்? செயலிழந்து கிடக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும், கிராம சபைக்கும் உயிரூட்டுவது யார்? ஒவ்வொரு ஊரிலும், நகரங்களின் ஒவ்வொரு பள்ளியைச் சுற்றிய சமுதாயத்திலும் பத்துப் பேர், அக்கறை கொண்ட ஆர்வலர்கள் முன் வந்து கைகோர்த்தால், சாதிக்க இயலாததா? வெள்ளமும், புயலும் தாக்கும்போது, திரண்டு எழும் லட்சியப் படை, ஜீவாதாரமான கல்வி காக்க எழுந்து வாராதா?  

உணர்வு கொண்ட, உறுதி கொண்ட, ஒன்றுபட்ட மக்கள் சமுதாயம் இன்றைய சீரழிவுக் காலத்திலும் கல்வியைக் காக்க முடியும்; ஜனநாயகம் காக்க முடியும். கண்காணிப்போம்! கல்வி காப்போம்!

(தலைவர், பள்ளிக் கல்வி மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு, புதுச்சேரி)

No comments:

Post a Comment