Friday, 8 June 2018

புதிய சீருடை கிடைக்காமல் மாணவ, மாணவிகள் ஏமாற்றம்!!!

நெல்லை:  தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
சீருடை மாற்றம் தொடர்பாக முறையான தகவல் இல்லாததால் புதிய சீருடை கிடைக்காமல் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை நடைமுறையில் இருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டு 52 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

 இதேபோல உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டனர்.

1 முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டையும், இளஞ்சிவப்பு நிறக் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும்

 மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிறக் கோடிட்ட மேல் கோட் அணிய வேண்டும் ‌என அறிவுறுத்தப்பட்டது.

 இதே போல பிளஸ்1  மற்றும் பிளஸ்2 மாணவர்கள் கருநீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகள் கூடுதலாக கருநீலக் கோடிட்ட மேல் கோட்டும் அணிய வேண்டும்.

 ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போன்று, இந்த புதிய சீருடைகளை மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது.

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தமிழக அரசால் இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. எனவே அந்த இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டது.

இந்த சீருடை மாற்றம் இந்த கல்வி ஆண்டு முதல் (ஜூன் 1) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டன

 இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் வரும் திங்கள் கிழமை முதல் (ஜூன் 11ம் தேதி) புதிய சீருடையில் வர வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

 இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மாலை நேரங்களில் புதிய சீருடை கேட்டு ஒவ்வொரு ஜவுளிக்கடையிலும் ஏறி, இறங்கி வருகின்றனர்.

ஆனால் நெல்லையில் எந்த ஜவுளிக் கடையிலும் புதிய சீருடை போதிய அளவு இருப்பு இல்லை. இந்த சீருடை கிடைக்க 15 நாட்கள் ஆகும் எனக் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் மாணவ, மாணவிகள் புதிய சீருடை அணிந்து தான் திங்கள் கிழமை முதல் பள்ளிக்கு வர வேண்டும்.

 இல்லையெனில் அனுமதிக்க முடியாது எனவும் ஒரு சில அரசு, அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  சீருடையே கிடைக்காத நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் புதிய சீருடை  அணிந்து செல்வது சாத்தியமில்லை.

புதிய சீருடை அணிந்து செல்ல மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்  என பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ஜவுளிக்கடை வட்டாரங்களில் விசாரித்த போது, முதலில் புதிய சீருடை தொடர்பாக அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு இல்லை.

 இதனால் பழைய சீருடையை கொள்முதல் செய்வதா, புதிய சீருடை கொள்முதல் செய்வதா என்ற குழப்பத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் கொள்முதல் செய்யவில்லை.

 புதிய சீருடைகள் உற்பத்தியும் செய்யப்படவில்லை. தற்போது தினமும் 100க்கும் மேற்பட்டோர் புதிய சீருடை கேட்டு வருகின்றனர். ஆனால் எங்கும் புதிய சீருடை இருப்பு இல்லை

 இப்போது தான் அதற்கான ஆர்டர் கொடுத்துள்ளோம். எனவே சீருடை வந்த பிறகே மாணவ, மாணவிகளுக்கு வழங்க முடியும் என்றனர்.

 இதுகுறித்து நெல்லை முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா கூறுகையில், புதிய சீருடை ஜூன் 1 முதல் அணிந்து வர வேண்டும் என அரசு கூறியுள்ளது.

 அதே நேரத்தில் புதிய சீருடை கிடைக்காத சூழ்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை அணிந்து வர கால அவகாசம் வழங்கப்படும்.

 அந்த காரணத்திற்காக மாணவ, மாணவிகளை யாரையும் அனுமதிக்க மாட்டோம் என கூற முடியாது. இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றார்.



No comments:

Post a Comment