Thursday, 7 June 2018

விடாது துரத்தும் நீட்: பலியாகும் மாணவிகள்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் திருச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர்
நேற்றிரவு (ஜூன் 6) தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில், தோல்வியைத் தாங்க முடியாத மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்த உத்தமர்கோயில் திருவள்ளுவர் அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவர் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர். இவரது மகள் சுபஸ்ரீ(17). தனியார் பள்ளியில் படித்த சுபஸ்ரீ பனிரெண்டாம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்பதால், நீட் தேர்வுக்கு முழு மூச்சுடன் படித்துள்ளார். நீட் தேர்வில் வெறும் 24 மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலுள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறினாலும், சுபஸ்ரீ சோகமாகவே இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அவரின் தந்தை வீட்டின் வெளிக் கதவை அடைக்கச் சென்றுள்ளார். அப்போது, சுபஸ்ரீ தன்னுடைய அறைக்குச் சென்று தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், பின்புற ஜன்னல் வழியில் பார்த்தபோது, அவர் தூக்கிலிட்டுக் கொண்டது தெரியவந்தது.

அவரை மீட்டு தனியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சுபஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாணவி சுபஸ்ரீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி சுபஸ்ரீ குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபஸ்ரீ நீட் தேர்வில் 24 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வினாக்களுக்கு சுபஸ்ரீ சரியான பதில் எழுதியிருந்த போதிலும், தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் காரணமாக சுபஸ்ரீ தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி பிரதீபாவின் மறைவிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு மறைவை தாங்கி கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத்திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமின்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றால் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவர்கள் தோல்வியடைவது இயல்பு தான். இதில் மாணவர்களின் தவறு எதுவும் இல்லை. இனியும் எந்த ஒரு மாணவரோ, மாணவியோ நீட் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment