Monday, 18 June 2018

ஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடமில்லை!


மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் மத்திய தகுதித் தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மத்திய அரசினால் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ உடன் இணைந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான மத்திய தேர்வுகளில் இதுவரை இருந்த தமிழ்மொழி நீக்கப்பட்டது. அது மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,குஜராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை 20 மொழிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த தேர்வானது இரண்டு தாள்களாக நடைபெறுகின்றன. முதல் தாளானது முதல் வகுப்பிலிருந்து 5 வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிவதற்கு நடத்தப்படுகிறது. இரண்டாம் தாளானது ஆறிலிருந்து 8 வது வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்காக நடத்தப்படுகிறது. இரண்டு தாள்களிலும் மொழியானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 60 மதிப்பெண்கள் பெறுவதே தகுதி மதிப்பெண் ஆகும். தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால் மொத்த மதிப்பெண்கள் 150இல் 30 மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்று சென்னையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 7.06 லட்சம் பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 12,700 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக கல்வியாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், இது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை மனித உரிமை பிரிவுகள் 14,15,16 மற்றும்21 ஆகியவற்றை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment