Thursday, 28 June 2018

மரம் வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதலாக 10 மார்க்!


சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியொன்று மரம் வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதலாக 10 மதிப்பெண்ணை வழங்கி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், ராஜ் நந்த்காம் மாவட்டத்துக்குட்பட்ட ராய்ப்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர், மரம் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம், ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்படி, அப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தப்பட்டனர்.

மேலும், அவர்களது வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அந்தக் கிராமத்தின் பிற பகுதிகளிலும் மரம் வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக அந்த மாணவர்களுக்கு மா, வேம்பு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாணவர்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர். அவர்கள் மரக்கன்றுகளை ஒழுங்காக நடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக வகுப்பாசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 9ஆம் வகுப்பு படிக்கும்போது மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள், பின்னர் 10, 11, 12ஆம் வகுப்புகள் என மாறிய நிலையிலும் அவற்றைப் பராமரிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

இவ்வாறு, மரங்களை ஒழுங்காகப் பராமரித்து வந்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் போனஸாக 10 மதிப்பெண் வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில், அந்த மரக்கன்றுகள் சிறிய மரங்களாகச் செழித்து வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் எனக் கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment