Saturday, 5 May 2018

ஒரு கோடி வேலைவாய்ப்புக்கு வாய்ப்பு!


சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு விற்பனை சார்ந்த ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு சேவைகள் வழங்கும் நிறுவனமான டீம்லீஸ் சர்வைசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது நடைமுறையில் உள்ள 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைப்பதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை இந்தியாவால் உருவாக்க முடியும். தனிப்பட்ட நிறுவன எண், ஊழியர் ஊதியத் தேர்வு, பிபிசி புகார் தளம், ஆலைகள் திருத்தச் சட்டம், சிறு ஆலைகள் சட்டம் உள்ளிட்டவையும் மேற்கூறிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பங்களிக்கும். நகரமயமாதல், நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு, இளைஞர்களின் செலவிடும் திறன் அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறை போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

டீம்லீஸ் சர்வைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ரீதுபர்னா சக்ரபோர்தி இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “நிறுவனங்கள் எந்தளவுக்கு மிக வேகமாகவும், அதிகமாகவும் பொருட்களை விற்பனை செய்கின்றனவோ அதற்கேற்ப வேலைவாய்ப்பு உருவாக்கவும், பொருளாதார மேம்பாடும் இருக்கும். மும்பையில் மட்டும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் மும்பையில் விற்பனைப் பிரிவில் மட்டும் 3.35 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இது நாட்டின் மொத்த விற்பனைப் பிரிவு ஊழியர்களில் 22 சதவிகிதமாகும். அடுத்த ஆறு மாதங்களில் இவர்களின் எண்ணிக்கை 10,000 அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment