Thursday, 3 May 2018

இந்தியாவின் அழகான ரயில் நிலையம்!!!


இந்தியாவின் அழகான ரயில் நிலையங்களின் வரிசையில் மதுரை ரயில் நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளைக் கவரும் வகையில் ரயில் நிலையங்களை அலங்கரிக்க வேண்டும் என்று அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியது. அழகான ரயில் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் ரயில் நிலையங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவித்தது. இதற்காக 11 ரயில்வே மண்டலங்களில் உள்ள 62 ரயில் நிலையங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களை உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், ஓவியங்கள் தொடர்பான விபரங்களை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பிவைத்தனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 62 ரயில் நிலையங்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் மதுரைக் கோட்டம் சார்பில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்கள் பங்கேற்றன. இதில், மதுரை ரயில் நிலையம் இரண்டாம் இடம் பிடித்து ரூ.5 லட்சம் பரிசை வென்றுள்ளது. மத்தியக் கிழக்குக் கோட்டத்தைச் சேர்ந்த மதுபானி ரயில் நிலையமும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய ரயில்வே கோட்டத்தில் வரும் பல்ஹர்ஷா மற்றும் சந்திரபூர் ரயில் நிலையங்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

மதுரை தொடர்பான பல்வேறு ஓவியங்கள் மதுரை ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஓவியமாக இடம்பெற்றுள்ளது. இது தவிர, வண்ணமயமான ஓவியங்கள் ரயில் நிலையத்தின் பல சுவர்களை அலங்கரிக்கின்றன.



மண்டல ரயில்வே மேலாளர் நீனு இட்யேரா, “அழகான ரயில் நிலையங்களில் மதுரை ரயில் நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளூர் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதற்கு வெற்றி கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் மதுரை ரயில் நிலையம் மற்ற ரயில் நிலையங்களை விடத் தூய்மையாக உள்ளது. 5 மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் 75 தொழிலாளர்கள் கொண்ட குழு ரயில் நிலையத்தை சுத்தம் செய்துவருகின்றனர். ரயில் நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள ஆண்டுக்கு 2கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இரண்டாம் பரிசாக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு, தெற்கு ரயில்வே நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment