Friday, 18 May 2018

பதவியேற்பு செல்லுமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!


கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான
வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சார்ந்த குமாரசாமி மற்றும் பாஜகவைச் சார்ந்த எடியூரப்பா இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் அழைப்பை அடுத்து மே 16ஆம் தேதி இரவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். பாஜக மெஜாரிட்டி இல்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். இந்திய வரலாற்றில் இல்லாத அளவில் மே 16ஆம் தேதி நள்ளிரவே இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், காப்டே அடங்கிய அமர்வு, எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும் இந்த மனுவைப் பின்னர் விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று (மே 17) மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் வஜுபாய் வாலாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ராம்ஜெத் மலானி இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஆளுநரின் முடிவுக்கு எதிராக ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் மஜத தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது, எனவே, அத்துடன் சேர்த்து இந்த மனுவையும் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர்.
காங்கிரஸ், மஜத மற்றும் ராம்ஜெத் மலானி ஆகியோர் தாக்கல் செய்த மனுவானது நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், காப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 18) காலை 10:30 மணியளவில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தின் துணை முதல்வராக மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டிருக்கும்போதே வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி, தனது கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்று 12 மணி நேரத்துக்கு மேலாகியும் நேற்று இரவு வரை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும், எடியூரப்பா பதவியேற்பு நிகழ்வில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்வுகள் கர்நாடக மாநில பாஜகவினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment