Sunday, 13 May 2018

இங்கிலாந்துக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்தியா!


இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூலதனம் கிடைக்கவும், அவர்கள் சர்வதேசச் சந்தையை அடையவும் உதவி செய்ய இந்திய ஐடி தொழில்துறை அமைப்பான நாஸ்காமும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றவுள்ளன.

நாஸ்காம், இங்கிலாந்து கூட்டணியின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பெரும் தகவல் பகுப்பாய்வுகள், சைபர் பாதுகாப்பு போன்ற முக்கிய தொழில்நுட்பப் பகுதிகளில் திறன்களை மேம்படுத்த இங்கிலாந்தில் ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ்’ என்ற தளத்தை நாஸ்காம் தொடங்கியுள்ளது. இதுபற்றி நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் பேசுகையில், “இந்தக் கூட்டணி திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளுக்கான தளமாக இருக்கும். மே மாத இறுதியில் ஃபியூச்சர் ஸ்கில்ஸ் இயங்கத் துவங்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாவதை நோக்கி இத்தளம் பயணிக்கும்” என்று கூறினார்.

இங்கிலாந்தில் 30,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்நிறுவனங்களில் பெரும்பாலானவை நாஸ்காமின் உறுப்பினர்களாகவே உள்ளன. இங்கிலாந்தின் டிஜிட்டல், கலாச்சார, ஊடக மற்றும் விளையாட்டுத் துறைச் செயலாளரான மேட் ஹேன்காக்கும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கமும் இணைந்து மே 11ஆம் தேதியன்று இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப ராக்கெட்ஷிப் விருதுகளைத் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment