Saturday, 5 May 2018

நோபல் பரிசை நிறுத்தக் காரணம்?


உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, 2018ஆம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான தி ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள காத்ரீனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்புக்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு வழங்கப்பட இருந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.

இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில், “நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். நீண்டகால நோக்கில் சில மாற்றங்களால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. புதிய நோபல் பரிசு பெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களின், நோபல் அறக்கட்டளையின், எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது. அது அடுத்த ஆண்டு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த உயரிய விருது இதற்கு முன் உலகப் போர் காரணமாக 1940 முதல் 1943 வரை வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின் இந்த ஆண்டுதான் விருது வழங்கப்படாது என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment