Friday, 11 May 2018

டிடியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்!


2019ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆன்லைன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய முறைகளுடன் டிடியாகவோ அல்லது பல்கலைக்கழக வங்கிக் கணக்கிலோ பெற முடியுமா என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று (மே 11) மீண்டும் நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, ”42 உதவி மையங்களில் ஆன்லைன் நடைமுறைக்காக 2580 கணினிகள் வைக்கப்பட்டு, தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்; ஒவ்வொரு மையத்துக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து முழுமையாகத் தெரிந்த அண்ணா பல்கலைக்கழக பணியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறையில் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், டிடியாகப் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை 2016-17, 2017-18 ஆண்டுகளில் இருந்தே அமலில் உள்ளது. அப்போது எவ்வித புகாரும் எழவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தாண்டு கூட இதுவரை 55 ஆயிரம் பேர் எவ்வித இடையூறும் இல்லாமல் விண்ணப்பித்துள்ளனர்; எனவே டிடியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்த இயலாது எனத் தெரிவித்தார்.

ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, கணினியில் இணையதள வசதி இல்லாதவர்கள், டெபிட் கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவை இல்லாதவர்களின் நிலை என்ன ஆகும் எனக் கேள்வி எழுப்பினர். கட்டணம் செலுத்த முடியாததால் விண்ணப்பிக்க முடியாத நிலை யாராவது ஒருவருக்குக் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கருத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர்.

கட்டணத்தை டிடியாக ஏற்றுக்கொண்டு, அதை அண்ணா பல்கலைக்கழக கரன்ட் அக்கவுன்ட் மூலம் நெட் பேங்கிங்கில் பரிமாற்றம் செய்யலாமே எனக் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விண்ணப்பக் கட்டணத்துக்கான தொகையை டிடியாகப் பெற்றுக்கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தார். மேலும் அதற்காக மென்பொருள் மாற்றியமைக்க ஒருவார கால அவகாசம் தேவைப்படும் என்பதால், மே 18ஆம் தேதிக்குள் செய்துவிடுவதாகத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதியான இந்த நிலைப்பாட்டை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment