Thursday, 3 May 2018

செல்பேசி, முறுக்கு மீசை : மாணவர்களுக்குக் கட்டுப்பாடு!


பள்ளி மாணவர்கள் செல்பேசி பயன்படுத்தக் கூடாது, முறுக்கு மீசை வைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் 11 விதிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்; அதை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்துவரக் கூடாது. சட்டையை இறுக்கமாக அணியக் கூடாது. அரைக்கை சட்டையை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை ‘டக் இன்’ செய்ய வேண்டும். டக் இன் செய்யும்போது சட்டை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும். கை, கால் நகங்கள், தலை முடியை சரியான முறையில் வெட்ட வெண்டும். முறுக்கு மீசை வைக்கக் கூடாது. கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, காதில் கம்மல், கடுக்கன், செயின் ஆகியவற்றை அணிந்துவரக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை எடுப்பதென்றால், பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பு ஆசிரியர் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும். பள்ளிக்கு செல்பேசி, இருசக்கர வாகனம் கொண்டுவரக் கூடாது. மீறினால் அவை பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment