Sunday, 13 May 2018

சடலத்தைத் தைத்த சலவைத் தொழிலாளி: மூன்று பேர் சஸ்பெண்டு!


துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடலை மருத்துவப் பணியாளர் அல்லாத சலவைத் தொழிலாளி ஒருவர் ஊசியால் தைத்த விவகாரத்தில் மூன்று மருத்துவப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 14 மருத்துவர்கள் மற்றும் 17 செவிலியர்கள் உட்பட 40 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் மருத்துவப் பணியாளர் அல்லாத சலவைத் தொழிலாளி ஒருவர், லுங்கி கட்டிக்கொண்டு சாதாரண உடையில் கையில் கையுறை அணிந்தவாறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடலைத் தைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

மருத்துவப் பணியாளர் அல்லாத சலவைத் தொழிலாளி ஒருவர் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சம்ஷத் பேகம் தலைமையிலான குழுவினரை துறையூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அந்தக் குழு மேற்கொண்ட விசாரணையில், வீடியோவில் இருந்த நபர் அம்மருத்துவமனையில் ஒப்பந்த சலவைத் தொழிலாளியாகப் பணி புரியக்கூடிய வீரமணி (வயது 52) என்பது தெரியவந்தது. மேலும் மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தவுடன், உடலின் பாகங்களை ஒன்றுசேர்த்து தைக்கக்கூடிய பணியில் மருத்துவப் பணியாளர்களுக்கு பதிலாக சலவைத் தொழிலாளி வீரமணி அப்பணியைச் செய்துவந்ததும் உறுதியானது.

இது தொடர்பாக, “மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய சில மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை சலவைத் தொழிலாளியைக் கொண்டு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக மூன்று மருத்துவப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, விரிவான அறிக்கை ஒன்று உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது” என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மருத்துவமனையில் எத்தனை நாள்களாக இதுபோன்ற தவறு நடைபெற்று வருகிறது என்றும் இந்தத் தவறுகளைச் செய்யும் மருத்துவப் பணியாளர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment