Sunday, 13 May 2018

தகுதியற்ற பணியாளர்கள்: தமிழக அரசுக்கு உத்தரவு!


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், ‘அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக ஊழியர்கள், பேராசிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். தமிழக அரசு கட்டுப்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் வசம் இருந்தபோது பணம் பெற்றுக்கொண்டு தேவைக்கு அதிகமாக தகுதி மற்றும் திறமையற்ற பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். எனவே, இந்த முறைகேடு தொடர்பாகச் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று (மே 12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் வசம் இருந்தபோது நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள், பணியாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் 226 பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. பணியில் இருப்பவர்கள் சரியான சான்றிதழ் கூட இல்லாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பணியாளர்களின் சான்றிதழ்களைத் தமிழக அரசு ஆய்வு செய்து, முறைகேடாகப் பணியில் சேர்ந்தவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, ஆளுநர், செயலர், அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர் .

No comments:

Post a Comment