Monday, 7 May 2018

மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கைது போராட்டத்தை ஒடுக்க முனையாமல் - சுமூகத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!!

மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கைது
போராட்டத்தை ஒடுக்க முனையாமல் - சுமூகத் தீர்வு காண

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


தமிழகத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி, ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும், சத்துணவு - அங்கன்வாடி - வருவாய் கிராம உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


அதிமுக அரசு ஏற்கனவே இது குறித்து தேர்தல் அறிக்கையிலும், சட்டமன்ற பட்ஜெட் உரையிலும், 110 விதியின் கீழும் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாமல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி அளித்தும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.  கோரிக்கை தீர்வு காணப்படாத நிலையில் மீண்டும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 8.5.2018 அன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பல வாரங்கள் ஆன பின்னரும் போராட்ட தலைவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண முயற்சிக்கவில்லை. இதற்கு மாறாக, போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கத் தலைவர்களை மாநிலம் முழுவதும் இரவோடு, இரவாக கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை வழியிலேயே அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதில் பெண்கள், கைக்குழந்தைகளுடன் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ள கொடுமை நடைபெற்று வருகிறது. இத்தகைய அரசின் மோசமான நடவடிக்கைகள் அரசின் ஆணவப்போக்கையே எடுத்துக்காட்டுகிறது. மேலும் இது நிலைமையை சிக்கலாக்கவே உதவி செய்யும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழக அரசு இத்தகைய நடைமுறையை கைவிட்டு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

போராடுகிற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை மிரட்டி பணிய வைக்கும் அரசின் ஆணவப்போக்கினை கண்டித்து அனைவரும் வலுவான கண்டன குரல்கொடுக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

No comments:

Post a Comment