Thursday, 3 May 2018

மழலையர் வகுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு!


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகளைத் தொடங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 2014-2015 கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி, தற்போது மாநகராட்சியில் உள்ள 281 பள்ளிகளில் 200 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 2016-2017ஆம் ஆண்டில் மட்டும் 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடக்கோரி மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் தண்டபாணி அமர்வு முன்பு நேற்று (மே 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல் படுத்த வேண்டும் எனவும், கல்வி பெறும் உரிமை சட்டப்படி, மழலையர் வகுப்புகள் தொடங்குவது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், இம்மனுவுக்குத் தமிழக அரசு மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment