Thursday, 3 May 2018

ஜூன் 8: ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!



ஊதிய முரண்பாடுகளைக் களையாவிட்டால் ஜூன் 8ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் போதுமான அளவில் இல்லை என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்படுகிறது. சேவையில் இருக்கும் ஆம்புலன்ஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு சார்பில் வழங்கப்படும் ஊதிய உயர்வை ஆண்டுதோறும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையாவிட்டால் ஜூன் 8ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை, பொதுமக்களுக்குத் தேவை என்ற வகையில் செயல்படுகிறது. ஆனால், இந்த சேவைத் துறையில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அவசர சிகிச்சைக்காக போராடும் ஒருவரை மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குறிப்பிட்ட நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்று பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே விபத்தில் சிக்கிய இருவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல, 108 ஆம்புலன்ஸ் வராததின் காரணமாக இருவர் பலியாகியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தை அடுத்த நசரத்பேட்டையைச் சேர்ந்த சரிகாவுக்கு இரண்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல பல மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் அந்த மாணவி உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வசதியில்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதியுற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில் இயங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மார்ச் மாதத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment