Sunday, 13 May 2018

போக்குவரத்து விதிமீறல்: அபராதத்துக்கு 48 மணி நேரம் கெடு!


போக்குவரத்து விதியை மீறினால் அதற்கான அபராதத்தை 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும். அப்படிக் கட்ட தவறினால் வீட்டுக்கே போலீஸார் வந்து சம்மன் அளிப்பார்கள் என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

‘தமிழக போக்குவரத்து காவல் துறை, சாலைகளில் போக்குவரத்து விதி மீறல்களை மேற்கொள்வோரிடம் அபராதம் வசூலிக்க புதிய முறையை அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களினால் அதிகமான விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. குடித்துவிட்டு இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது, ஒருவழிப் பாதைகளில் செல்வது எனப் போக்குவரத்து விதி முறைகளை மீறுவது தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீஸார் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் எழுந்தன. சில இடங்களில் போக்குவரத்து போலீஸார் வரம்பு மீறி செயல்படுவதும் நடந்தன. இதனால் ஒரு கா்ப்பிணிப்பெண் உயிரிழப்பதும் நடந்தது.

இதைத் தொடர்ந்து அபராதத் தொகையை நேரடியாக வசூலிப்பதைப் தவிர்த்து ரொக்கமில்லாத பரிமாற்ற முறை அதாவது கிரெடிடு கார்டுகளை ஸ்வைப் செய்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதிய முறையாக அபராதம் 48 மணி நேரத்தில் வங்கிகளின் மூலம் பரிமாறாவிட்டால் அல்லது கட்டப்படாவிட்டால் விதிமுறைகளை மீறுவோர் வீட்டுக்கே போலீஸாரே நேரில் வந்து சம்மன் அளிப்பார்கள்.

நாள்தோறும் இந்த முறையில் விதிமுறைகளை மீறுவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயர்களி்ல் சம்மன் தயாரிக்கப்பட்டு அவர்களின் வீட்டுக்கே போலீஸார் அனுப்பப்படுவார்கள். இந்தப் பணிகளில் போலீஸாரும் பெண் போலீஸாரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.’

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment