Friday, 4 May 2018

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.


தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 4) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.

2018-2019ஆம் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய நான்கு வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்; புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பாடத்திட்டத்தைத் தயாரிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட சர்வதேச தரத்தில் உள்ளது. ஒன்றாம் வகுப்பு பாடத்தில் நில மேலாண்மை, நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டடங்கள், அடுக்குமாடிகள் கட்டப்படும்போது எந்த வகையிலான மணல் மற்றும் இடங்களில் கட்ட வேண்டும் என்பது பற்றிய கல்வி அறிவை நில மேலாண்மை அளிக்கும். வெள்ளம், சுனாமி வரும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு அம்சங்களைப் பற்றி நீர் மேலாண்மை கல்வி போதிக்கும். அதுபோலவே வெப்ப மேலாண்மை உள்ளிட்ட மற்ற பாடத் திட்டங்களும் புதிய அறிவை மாணவ, மாணவிகளிடம் கொண்டுசேர்க்கும். எனவே இதுபோன்ற கல்வித் திட்டம் மூலம் தரமான அறிவைக் கொண்ட மாணவர்களைத் தமிழகத்தில் உருவாக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment