Sunday, 8 April 2018

ஐஐடிக்களுக்கு இணையாக அண்ணா பல்கலை: சூரப்பா


ஐஐடிக்களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வேந்தராகப் பதவி ஏற்கவுள்ள சூரப்பா பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகித்து வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாகவே இருந்தது.

துணைவேந்தரை நியமிக்க அமைக்கப்பட்ட முதல் இரண்டு குழுவும் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. பின்பு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மூன்றாவது குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு 160 பேராசிரியர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, அதில் பத்து பேரின் பட்டியலை கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் அண்ணா பல்கலை துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டார். இவர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. காவிரி பிரச்னை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கன்னடரான சூரப்பாவை ஆளுநர் துணைவேந்தராக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) சூரப்பா அளித்துள்ள பேட்டியில்,“ஐஐடிக்களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் “என்று கூறியுள்ளார். மேலும், மொழி ஒரு பிரச்னை இல்லை, தமிழ் மொழியைக் கற்று கொள்ள விரும்புகிறேன், மற்ற மாநிலங்களில் பணிபுரியும் போதும் அந்தந்த மொழியைக் கற்று கொண்டு பணிபுரிந்தேன்.

தேசிய நிறுவன தரப்பட்டியல் படி, அண்ணா பல்கலைக் கழகம் 10 ஆவது இடத்தில் உள்ளது. இது ஓரிரு ஆண்டுகளில் 8 ஆவது இடத்துக்குக் கொண்டுவரப்படும்.

அடுத்த வாரம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பதவி ஏற்கவுள்ளேன். நான் நியமனம் செய்யப்பட்டது குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று சூரப்பா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment