Wednesday, 4 April 2018

இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை!


இரண்டு சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு வேட்பாளர் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஒரு வேட்பாளர் இரண்டு சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது, தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. இரண்டிலும் வெற்றிபெறும் பட்சத்தில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான செலவையும் தேர்தல் ஆணையம் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறது. இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அரசின் செலவுகள் அதிகரிப்பதை அடிப்படையாக வைத்து, பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.

இன்று (ஏப்ரல் 4) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம். அதில், ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடத் தடை விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் யோசனையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்

No comments:

Post a Comment